Sunday, October 22, 2006

மர‌ம்

ஆய்வுக்கூடத்தில் இராசயன கலவையை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கையில்,கண்ணாடி சன்னல் வழியே சற்று
திரும்பி பார்வைக்குத் தென்பட்ட இயற்கையை ரசிக்கத் தொடங்கினேன். வரிசையாக தெரிந்த‌ ஆறேழு மரங்களில்,ஒன்று மட்டும் இலைகளை இழந்து மொட்டையாக காணப்பட்டது. மற்ற மரங்களெல்லாம்,பல வண்ணங்களில் அலங்காரத்தோடு தோற்றமளித்தது. பருவத்தை நிர்ணயிக்கும் தேவதையின் பாரபட்சத்தை ஒரு நொடி வெறுத்தேன்.உறவுகளின்றி தோற்றமளித்த மரம் என் அனுதாபத்திற்கு ஆளானது. இராசயன கலவை ஆராய்ச்சியில் மனம் லயிக்காமல்,அந்த மரத்தின் நிலமையை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தேன். சிறிது நேரம் கழித்து அது அந்த மரத்தின் "விதி" என்று தீர்மானம் செய்து என் அலுவலை பார்க்க சென்றுவிட்டேன்.

மாலை வேலை முடித்து செல்லுகையில்,ஒரு குரல் என்னை அழைத்தது. Do you have a minute என்று கூறி என் பதிலுக்கு காத்திருக்காமல் பேசத் தொட‌ங்கியது: "மதியம் என்னை பார்த்து அனுதாபப்பட்ட‌திற்கு நன்றி.ஆனால் அது தேவையில்லை; வருடம் ஒரு முறை, வெளித் தோற்றத்திற்கு மட்டும் உதவும் அம்சங்களை துறந்து, நிர்வானமாகி,தனிமையாகி, என்னுடையதாகிய வேர் மற்றும் மூடப்பட்டிராத கிளைகளோடு வாழ்வதை நான் மிகவும் விரும்புகிறேன். முடிந்தால் ஒரு முறை அவ்வாழ்க்கையை வாழ முயற்சி செய்." Have a Nice Evening !


சற்று அன்னாந்து பார்த்தேன். மொட்டை மரத்தை காணவில்லை.