Tuesday, March 21, 2006

அபகரிப்பு

தினசரி வாழ்க்கையின் அடிப்படை தேவை என்பதை காரணமாக்கி என் வரவுக்கேற்ப ஒரு கார் வாங்கினேன்.நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பேசுவதற்கு இன்ஸ்ட்டேட் காலிங் கார்ட் கட்டுபடி ஆகவில்லை என சாக்கு கூறி செல்-போனை பற்றினேன். காரில் செல்லும் பொழுது தொடராது இசை வேண்டுமென mp3-பிளேயர் பொருத்தினேன். நாளுக்கு நாள் காரோடு உறவாடும் நேரம் அதிகரிக்க செல்போன் செல்லமாய் கோபித்துக் கொள்ள, ஹெட்செட் வாங்கினேன். வெகு தூரப்பயணங்களில் போது செல்போனிற்கு சக்தி ஊட்ட கார் சார்ஜெர் வாங்கி கார்க்கும் செல்போனிற்கும் நட்பு பிறப்பித்தேன். இப்படியாக செய்து, தொழில் நுட்பத்தால் பிறந்த கருவிகள் என் தனிமையை அபகரித்து விட்டன.

Tuesday, March 14, 2006

தமிழில் பதிக்க


Sam அவர்களின் பதிவு மூலம் திரு.கோபி அவர்களின் யுனிகோடு கன்வெர்ட்டர் கண்டேன்.தமிழில் எழுதுவது சுலபமாகிவிட்டது.கோபி அவர்களுக்கு கோடி நன்றி. உங்களுக்கும் நன்றி sam.

http://www.higopi.com/ucedit/Tamil.html

Saturday, March 11, 2006

ஆடை





உன்னை தினமும் கவனித்து வருகிறேன். நாம் இருவரும் தினமும் இரண்டு மணி நேரமாவது ஒட்டி உறவாடுகிறோம்.. நீ இரண்டு வாரங்களுக்கு குறைந்து, ஒரு முறை அணிந்த ஆடையை உடுத்துவதில்லை. மாதத்தில் இரு முறையாவது புது துணியின் வாசனை முகர்கிறேன். நான் கட்டி வந்த அதே ஆடையுடன், ஒன்றரை வருடம் உன்னுடன் காலம் கடத்தி விட்டேன். சிந்தித்து பார். உனக்கு சரியென படுவதைச் செய்.


இதை கேட்டவுடன் அடுத்த நிமிடம் காரை சூப்பர் மார்க்கெட்க்கு செலுத்தினேன். ஆட்டோ கேர் பகுதிக்குச் சென்று கார் சீட் கவர் வாங்கி, குற்ற உணர்வு நீங்கி மகிழ்ச்சியுடன் வீடு வந்தேன்.

Wednesday, March 08, 2006

இரைச்சல்




இன்று காலை கண் விழித்ததிலிருந்து அலுவலுக்குப் புறப்படுவதற்கு முப்பது நிமிடங்கள தான் இருந்தது. விழித்த சற்று நேரத்திலிருந்தே உலகமே ஒரே இரைச்சலாக இருப்பதாக ஒரு உணர்வு.அதை தவிர்க்க லேப்டாபில் ராகா 2005சார்ட் பஸ்டர்ஸ் தொடக்கினேன். ஒலியை உச்சமாக வைத்தும் உலகத்தின் இணக்கமற்ற இரைச்சலிலிருந்து விடுதலை இல்லை. பின்பு குளித்து முடித்து ஷின்கான்சென்(Shinkansen) தடத்தில் செல்லும் ரயில் வேகத்தில் இறைவழிபாட்டை முடித்து உடுத்தி கிளம்பினேன்.

செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.”

என்ற குறள் நினைவு வர அதை தவறாக‌ எனக்கு சாதகமாக இந்த இரைச்சலான சூழலுக்கு தொடர்பு செய்து காலை சாப்பாடு உண்ணாமல் காரை நோக்கி விரைந்தேன். காரில் ஏறியவுடன் புதிதாய் பொருத்திய எம்.பி.3பிளேயரை தட்டி ஒலியைப் பெருக்கினேன்.மனதில் பல சிந்தனைகள், வருத்தங்கள், இரைச்சல்கள். அலுவலகம் சென்றடைந்து காரை நிறுத்தி விட்டு அடுத்த எட்டு மணி நேரத்திற்கு எனக்கு அடைக்கலம் தரும் அறை நோக்கி நடந்தேன். ஒரு மணி நேரமாக இருந்த இரைச்சல் இப்பொழுது இல்லை. ஒரு நிமிடம் சிந்தித்தேன் இரைச்சல் உலகத்திலிருந்து வந்ததா இல்லை என் உள்மனதின் பலவித யோசனைகளால் வந்ததா?