நியுஜெர்சியில் ப்ரின்ஸ்டன் சிட்டிக்கும் ஓல்ட்ப்ரிட்ஜ் சிட்டிக்கும் உள்ள தூரம் இருபத்தைந்து மைல். வாரம் இருமுறை தவறாமல் ரிஷியை பார்த்தாக வேண்டும் ராகுலுக்கு. செல்வதற்கு முன் ஃபோன் செய்து வீட்டில் இருக்கிறார்களா என்று உறுதி செய்து விட்டு, நேராக ரவுட் 27ல் உள்ள ஹாட் ப்ரெட்ஸ் சென்று, ரிஷிக்கு பிடித்த பைனாப்பில் கேக் வாங்கிக் கொண்டு, ரிஷியுடன் ரிலாக்சாக நேரம் செலவிடுவதை எண்ணி உற்சாகத்தோடு செல்வான் ராகுல்.
ரம்யா அக்காவை ராகுலுக்கு சிறு வயதிலிருந்தே பரிச்சியம். நடுவில் பல வருடங்கள் நேரடி தொடர்பு இல்லை. ராகுல் வேலை கிடைத்து நியுஜெர்சி வரும் பொழுது, ராகுலின் அம்மா ரம்யாவின் அம்மாவை சென்னை நங்கநல்லூர் கடைத்தெருவில் சந்திக்க, நியுஜெர்சி தலைப்பு செய்தியாக, ரம்யா அக்காவின் நியுஜெர்சி நம்பர் ராகுலிடம் வந்தது.
ஒரு ஞாயிரன்று ராகுல் போன் செய்துவிட்டு ரம்யா அக்கா வீட்டிற்கு சென்றான். ரம்யாவின் கணவர் பாலாஜியுடன் அறிமுகம் நடந்தது. மூன்று வயதான ரிஷி ஏதோ பல வருட பழக்கம் போல் அன்போடு பழகினான்.
எல்லா குழந்தைகளும் இப்படித்தான் உடனடியாக பழகிவிடுவார்கள் என்று ராகுலால் அந்த அன்பை சாதாரணப்படுத்த முடிவில்லை.
அன்று முதலே ராகுலுக்கு ரிஷி ஸ்பெஷல். ரிஷியும் ராகுலை "ராகுல் மாமா" என்றோ "ராகுல் அண்ணா" என்றோ அழைக்கவில்லை. ராகுல் என்றே அழைத்து வந்தான். ராகுலுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. ஆனால் ரிஷியின் பெற்றோர்கள் அவனுக்கு மரியாதை பாடங்கள் புகட்ட வெகு விரைவிலேயே ராகுல் "ராகுல் அண்ணா"வாகி விட்டது. பாலாஜியை சார் என்றும்,ரம்யாவை அக்கா என்றும் ராகுல் அழைத்து வந்தான்.
செப்டெம்பர் மாதம். இலையுதிர் காலம். ரிஷியை சந்திக்க சென்றான் ராகுல். சார் அலுவலகத்திலிருந்து வரவில்லை.சிறிது நேரம் அக்காவுடன் பேசிவிட்டு ரிஷியுடன் வாக்கிங் சென்றான் ராகுல். வீட்டு வாசல் படியை விட்டு இறங்கியவுடனே, எந்த திசை நோக்கி செல்லவேண்டும் என்று ரிஷி முடிவு எடுத்தான். நடந்து கொண்டிருக்கையில், “ஐ ஆம் யுஅர் யங்கர் ப்ரதர்” (I am your younger brother) என்று சொன்னான் ரிஷி. அன்றைய வாக்கிங் முழுவதும் ரிஷி ராகுலை பெயரிட்டுத்தான் அழைத்தான்.
பாதை முழுக்க ஒரே இலைகள், பல பல வண்ணங்களில். காற்று சற்று பலமாக வீச இலைகள் இங்கும் அங்கும் பறக்க ஆரம்பித்தது. குதூகலத்தில் ரிஷியும் இங்கும் அங்கும் ஓட, ராகுலும் அவன் பின்னாலேயே ஓடி அவன் கையை பிடித்துக்கொண்டான். உபயோகமாக நேரத்தை கழிக்க எண்ணி ரிஷியிடம் ராகுல் கூறினான் “தேர் ஆர் ஃ போர் சீசன்ஸ் இன் அ இயர் - வின்டர், ஸ்ப்ரிங், சம்மர், ஃபால். நவ் இட் ஸ் ஃபால் சீசன் பிகாஸ் லீவ்ஸ் ஆர் ஃபாலிங் ஆன் தி க்ரவுன்ட்.” (There are four seasons in a year – Winter, Spring, Summer and Fall. Now it is fall season because leaves are falling on the ground.) சிறிது நேரம் மெளனம் நிலவியது. பிறகு சட்டென ராகுலிடம் திரும்பி "ஐ நோ சம்திங். டுமாரொ ஆல் தீஸ் லீவ்ஸ் வில் ஃ ப்ளை டு தெ ட்ரி அன்ட் ஸ்டிக் தேர்" (I know something. Tomorrow all these leaves will fly to the tree and stick there.) என்றான் ரிஷி.
ஸ்ப்ரிங் சீசனைத்தான் ரிஷி வர்ணிக்கிறான் என்று ராகுலுக்கு புரிந்தது. இந்த இலைகள் மடிந்து போனவை, வின்டர் முடிந்து ஸ்ப்ரிங் சீசனில் மரங்களில் புதிதாக இலைகள் துளிர் விடும் என்று சொல்ல நினைத்தான் ராகுல். தன்னைச் சுற்றி இருப்பது, நடப்பது அனைத்தும் நிரந்தரம் என்று நினைக்கும் மூன்று வயது குழந்தையின் மனதில் அவநம்பிக்கையை பயிரிட விருப்பமில்லாமல், “தேர் யு கோ ரிஷி, யு காட் இட். இன் ஸ்ப்ரிங் ஆல் தீஸ் லீவ்ஸ் வில் கோ டு தெ ட்ரி” (There you go Rishi, you got it. In Spring all these leaves will be in the tree) என்று கூறினான். இருபது நிமிட நடைக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்தார்கள் ரிஷியும் ராகுலும்.
அன்று தனது வீட்டிற்கு செல்லும் பொழுது, ரிஷியுடன் பேசியதே ஓடிக்கொண்டிருந்தது ராகுலின் மனதில். வேதங்களை அடிப்படையாகக் கொண்டோ அல்லது பொதுவான இந்திய தத்துவியலின் அடிப்படையிலோ , ஜனனம்- மரணம் என்பது ஒரு சுழலும் சக்கரமாக கருதப்படுகிறது. இதே கோணத்தில் தீவிரமாக யோசித்துப் பார்க்கையில் ரிஷி கூறிய வார்த்தைகள் "டுமாரொ ஆல் தீஸ் லீவ்ஸ் வில் ஃ ப்ளை டு தெ ட்ரி அன்ட் ஸ்டிக் தேர்" (“Tomorrow all these leaves will fly to the tree and stick there”.) முற்றிலும் சரியாகப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment